சென்னை: 2024 - 25ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கடந்த மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரையிலும், ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர். இதில் மொத்தமாக 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 93 ஆயிரத்து 853 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கட்டணம் செலுத்திய 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் ஜூன் 12ஆம் தேதி வழங்கப்பட்டது. விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்த 4,489 விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி முதல் 23 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. மேலும், பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் 30 வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள், தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்களில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றன.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் தகுதியான மாணவர்களுக்கு நாளை (ஜூலை 10) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிடவுள்ளார்.
இதனை அடுத்து, தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவருக்கும் 200 மதிப்பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் ஆகிய விவரங்கள், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் நாளை காலை பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முதலில் நடத்தப்பட உள்ளன. இதற்கான கலந்தாய்வு அட்டவணையும் நாளை (ஜூலை 10) வெளியாகிறது என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆரூத்ரா நிதி நிறுவனத்திற்குத் தொடர்பு? - செல்வபெருந்தகை குற்றச்சாட்டு!