நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மேகமூட்டத்துடன் கூடிய கனமழை பெய்து வந்தது. மேலும் கடந்த 10 நாட்களில் அதிக அளவில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் நிலத்தின் ஈரத்தன்மை அதிகரிக்கத் துவங்கியது. இதன் காரணமாக மலைப்பாதையில் உள்ள சாலையோரங்களில் இலேசான மண்சரிவு ஏற்பட்டு, சிறிய அளவிலான பாறைகள் விழுந்து குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இதே போல் குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் ராட்சத பாறை அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. இந்த பாறையானது எந்த நேரத்திலும் உருண்டு விழும் சூழல் ஏற்படலாம், இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர் என என கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.
இதையும் படிங்க: இ-பாஸ் இல்லாமல் ஊட்டி, கொடைகானலுக்கு போக வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு!
இதனைத் தொடர்ந்து குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அந்தரத்தில் தொங்கிய பாறையை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் ஜோசிபி எந்திரங்கள் மூலம் தொங்கிய பாறையை அகற்றப்பட்டது. தொடர்ந்து அப்பறைகள் உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
கடந்த 2 நாள்களாக நடைபெற்று வந்த இந்த பணிகளானது தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி சாலையில் சென்று வருகின்றனர். இது குறித்து நீலகிரி மாவட்ட சமூக ஆர்வலர் குமார் என்பவர் கூறுகையில், "வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்தது.
இதனால் ஆங்காங்கே பாறைகள் உருண்டு சாலைகள் துண்டிப்பு ஏற்பட்டது. இது குறித்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்தின் மூலம் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பலனாக மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலையும் அந்தரத்தில் தொங்கிய பாறைகளை அகற்றி உள்ளனர். இதற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.