சென்னை: துபாயிலிருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட, பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டது எனக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. திமுக தலைமையில் இருக்கும் எங்களது கூட்டணி 40க்கு 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இந்தியாவைச் சேர்ந்த பல ஊடகங்கள் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் பல ஊழல்களை மறைக்கிறது. இப்பொழுது புதிதாக ஒரு தகவல் வந்துள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பல்வேறு நிறுவனங்கள் பாஜகவிற்குக் கோடிக்கணக்கில் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்துள்ளன.
அவற்றில் சில நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் இருக்கின்றன. மிக விரைவில் அதற்கான பட்டியல் வெளிவரும். ஊழல் செய்யவில்லை எனக் கூறிய பாஜக எவ்வளவு வாங்கியுள்ளது என்பதை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
தமிழ்நாட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறோம். அந்த வகையில் மோடியையும் நாங்கள் வரவேற்கிறோம் திருப்பூரில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. திருப்பூரில் நீண்ட நாட்களாக இஎஸ்ஐ (esi) மருத்துவமனை கட்டுவதாக் கூறிக் கொண்டிருக்கிறார். இதுவரையில் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை போல் காலதாமதம் பண்ணாமல் மருத்து மணை கட்டுப்படுமா எனப் பொறுத்து இருந்து பார்ப்போம்.
திருப்பூரில் பாஜகவிற்கு ஆதரவு இருக்கிறது என்ற பெயரில் இதைச் செய்கிறார்கள். ஆனால் திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கோடிக்கணக்கில் குதிரைப் பேரம் பேசி ஆட்சி செய்யும் பாஜக, திருப்பூரில் உள்ள தொழில் துறைக்கும் ஏதாவது நல்லது செய்தால் நன்றாக இருக்கும்.
காங்கிரஸ்- திமுக கூட்டணி எந்த இழுபறியிலும் இல்லை. திமுகவின் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி இருக்கும். 2004இல் 40க்கு 40 வெற்றி பெற்றது போல் இந்த முறையும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெரும்.விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினைப் பார்க்க உள்ளேன் என்றார்.
இதனையடுத்து வாரிசு அரசியல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பாஜகவின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். ஜோதிராதித்ய சிந்தியா எந்தக் குடும்பத்திலிருந்து வந்தார். ஜெய்ஷா என்ன பதவியில் இருக்கிறார் எனக் கேள்வி எழுப்பினார். காங்கிரஸில் மட்டும் வாரிசுகள் இருக்கிறது என்று கூற முடியாது" என்றார்.
இதையும் படிங்க: சேலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 சிறுவர்கள் கைது