சென்னை: ஃபெஞ்சல் புயல் (Cyclone fengal) காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை மற்றும் தாம்பரம் காச நோய் மருத்துவமனை வளாகங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக, இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மழை நீர் தேங்கும் சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குளம் போல் காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை:
தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை மற்றும் தாம்பரம் காச நோய் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல் தாக்கம்: சாலையில் தேங்கிய மழைநீர்; பணியில் மாநகராட்சி ஊழியர்கள்!
முழங்கால் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மருத்துவமனைக்கு உள்ளே செலவும், அங்கிருந்து வெளியில் வரவும் முடியாமல் தவித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் தரை தளத்தில் இருந்த நோயாளிகள், முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளடு எனவும் தரைத்தளத்தில் இயங்கி வரும் இசிஜி பிரிவு அங்கேயே செயல்பட்டு வருகிறது என மருத்துமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகள் சரியான முறையில் கொடுக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்திற்குள் மழைநீர் புகுந்த விடக்கூடாது என்பதால், ஜிஎஸ்டி சாலையில் மணல் மூட்டைகளை காவல்துறையினர் வைத்து தடுத்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, வேளச்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கதிரவனை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்ட நிலையில், “மழையின் காரணமாக பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர். இதனால், தற்போது போக்குவரத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மழையின் தாக்கம் குறையும் பட்சத்தில் பொதுமக்கள் தங்களது வாகங்களை மேம்பாலத்தில் இருந்து அப்புறப்படுத்துவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை இதேபோல் மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தப்பட்ட நிலையில், காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், சென்னை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட அபராதங்கள் திரும்ப வழங்கப்பட்டது. எனவே, இந்த முறை மேம்பாலத்தில் காரை நிறுத்தியவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை.
இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல்: கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!