சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 29) காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, பதிலுரை அளித்த முதல்வர் ஸ்டாலின், '' கொடநாடு விவகாரத்தில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு எதிரிகள் பயன்படுத்திய எட்டு செல்போன்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், கொடநாடு விவகாரத்தில் 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளதாக கூறிய அவர், சம்பவம் நடைபெற்ற நாளில் வெளிநாட்டில் இருந்து செல்போன் அழைப்புகள் வந்துள்ளதாகவும், அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
அத்துடன், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை கட்டாயம் வழங்கப்படும் எனவும் தெரிவித்த முதல்வர், காவல்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், பதிவேடு குற்றவாளிகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க பருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் புகார்களை விசாரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
குறிப்பாக, ''குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பது அரசின் எண்ணம் அல்ல, குற்றவாளிகளின் எண்ணத்தை குறைப்பதே அரசின் எண்ணம்'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்