சென்னை : தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபட்ட புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது. இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி,வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தனர்.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மின்னணு முறையில் இல்லாமல் காகிதத்தில் வழங்க வேண்டும் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு, சிபிஐ தரப்பில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : குட்கா முறைகேடு வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்; காரணம் என்ன?
அதில், பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தற்போது அமலில் உள்ள பிஎன்எஸ் சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காகிதம் வடிவில் மட்டுமே ஆவணங்களை வழங்கவேண்டும் என தெரிவிக்கப்படவில்லை. ஆவணங்களை வழங்க வேண்டும் என்று தான் உள்ளது.
குற்றப்பத்திரிக்கை, கூடுதல் குற்றப்பத்திரிக்கை, சாட்சிகள் பட்டியல், சான்று ஆவணங்களின் பட்டியல் ஆகியவை மட்டுமே காகித வடிவில் வழங்குவதாகவும், மற்ற வழக்கு ஆவணங்கள் மின்னணு சாதனங்கள் (pendrive) மூலம் வழங்குவதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வழக்கில் 26 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருப்பதால், பெரிய எண்ணிக்கையிலான ஆவணங்கள் உள்ளதால், மின்னணு வடிவில் வழங்குகிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, அனைத்து ஆவணங்களையும் காகித வடிவில் வழங்க வேண்டும் என்பது குட்கா வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் உள்ளதால், மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி, இந்த பதில் மனுவிற்கு குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்