சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து சிறப்புப் புலனாய்வு குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு சொத்து ஆவணங்கள், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
இதில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை வைத்து ஞானசேகரன் வரவு செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் உதவியுடன் கிண்டி வட்டாட்சியர், ஞானசேகரன் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரது வீட்டை அளவிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஞானசேகரனின் சொத்து மதிப்புகளை அளவீடு செய்து அதனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!
இந்த நிலையில், வட்டாட்சியர் நடத்திய சோதனையில், ஞானசேகரன் வீட்டின் ஒரு பகுதி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பது தெரிய வந்துள்ளது. 620 சதுர அடியில் மூன்று மாடிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த வீடு, 420 சதுர அடி கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதும் மற்ற இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில், மேலும் 26 இடங்களில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டப்பட்டிருப்பதும் வட்டாட்சியர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு அவர்களும் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு சம்பந்தமான அறிக்கைகளை வட்டாட்சியர், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
அதில், கோட்டூர்புரத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதால் அது அவரின் சொத்தாக கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மற்ற இடங்களில் உள்ள சொத்துக்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.