சென்னை: சென்னையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வரை மாஞ்சா நூல் தயாரித்தல், விற்றல் உள்ளிட்டவைக்கும், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மாஞ்சா நூல் காத்தாடியால் பலர் பலத்த காயமடைந்தது மட்டுமல்லாமல், பல உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் மாஞ்சா நூல் காத்தாடி தயாரிக்கவும், காத்தாடி பறக்க விடவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. அதனை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதாவது, காவல்துறை உத்தரவை மீறி மாஞ்சா நூல் காத்தாடி தயாரித்து, விற்றவர்கள் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மாஞ்சா நூல் காத்தாடி மீதான தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ட்ரோன்கள் பறக்கவும், சிறிய வகை ரிமோட் கண்ட்ரோல் விமானங்கள் ஆகியவை பறக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி முதல், டிசம்பர் 25ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: எஃப்ஐஆர் வெளியிட்ட நபர்கள் குறித்து விசாரணை.. சென்னைப் பெருநகர காவல் ஆணையர் பேட்டி!
தற்போது, அதை நீட்டிக்கும் வகையில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மாஞ்சா நூல் காத்தாடி மீதான தடையை நீட்டித்துள்ளார். மேலும், ட்ரோன்கள் பறக்கவும், சிறிய வகை ரிமோட் கண்ட்ரோல் விமானங்கள் ஆகியவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.