சென்னை: மனிதர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சையை வழங்குவதற்கு வடபழனி காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதய அதிர்ச்சி சிகிச்சை மையத்தின் நோக்கம்: இந்த முன்னெடுப்பின் தனித்துவமான அம்சம் என்பது, வழக்கமான 3 நிலை சேவைகளை கடந்து மிகவும் பிரத்யேகமான உயர் மருத்துவ சிகிச்சையான 4 ஆம் நிலை பராமரிப்பை வழங்குவதற்கான ஏற்பாடாகும். 4 ஆம் நிலை சிகிச்சை பராமரிப்பில் அரிதான மற்றும் சிக்கலான செயல்முறைகள் போன்ற மேம்பட்ட சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சை மற்றும் இதயமாற்று சிகிச்சை போன்ற பிரிவுகளில் தனிச்சிறப்பான நிபுணத்துவம் ஆகியவை உள்ளடங்கும்.
இதய அதிர்ச்சி சிகிச்சை குழு நிபுணர்கள் : உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளின் நிலைமையை சீராக்க, மெக்கானிக்கல் சர்குலேட்டரி சப்போர்ட் (MCS) சாதனங்களை ஒருங்கிணைக்கிறது. இச்சேவையானது வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரத்திலும் கிடைக்கிறது. இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவில், இதய சிகிச்சை மருத்துவர்கள், நிபுணர்கள், மயக்கவியல் வல்லுநர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்கள் உட்பட பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுகின்றனர்.
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சையை உடனடியாக வழங்குவதற்கு இவர்கள் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் இயங்குகின்றனர். இந்நிலையில், காவேரி மருத்துவமனையில், இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடக்கத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!
இந்நிகழ்ச்சியில், ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இதய பராமரிப்பு மையத்தின் தலைவர், இயக்குநர் தணிகாசலம், காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர், செயலாக்க இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இது குறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “இதய அதிர்ச்சி சிகிச்சை குழு (cardiac shock team) இதயம் சார்ந்த அவசர நிலைகளை எதிர்கொள்ளும், உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சையை வழங்க உள்ளோம். உரிய நேரத்திற்குள் உயிர் காக்கும் இடையீட்டு சிகிச்சைகள் நோயாளிகளுக்கு கிடைப்பதை இது உறுதி செய்யும் வகையில் பிரத்யோகமான ஹெல்ப்லைன்(Helpline) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கார்டியாக் அரெஸ்ட் (cardiac arrest) எனப்படும் இதய பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பு விகிதங்களை நிச்சயமாக குறைக்கும். இந்த குழு எக்மோ (Extracorporeal membrane oxygenation), இம்பெல்லா(Impella) மற்றும் LVAD சாதனங்கள் போன்ற பொறியியல் சார்ந்த ரத்த சுழற்சி ஆதரவு சாதனங்கள் தேவைப்படும் நோயாளிகளின் சிக்கலான பாதிப்புகளை கையாள்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தனிச்சிறப்பான திறன்களை ஒருங்கிணைக்கிறது.
சர்வதேச நெறிமுறைகளின் அடிப்படையில் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், இதயவியல் மருத்துவர் மற்றும் இதயவியல் சார்ந்த மயக்கவியல் நிபுணர் உட்பட குறைந்தபட்சம் 3 மருத்துவர்களை உள்ளடக்கியதாக குழு இயங்கும். அத்துடன் எக்கோ கார்டியோகிராபி (Echocardiography) மற்றும் உறுப்பு வழி செலுத்தலில் பயிற்சி பெற்ற மருத்துவர் உதவியாளரின் ஆதரவும் இக்குழுவிற்கு இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்