சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால், கடந்த மாதம் முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஜூலை 22ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தாம்பரம் வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர், சீரமைப்பு பணிகள் இருந்ததால் இன்னும் 4 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 18 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சீரமைப்பு பணியினால் ரயிலில் தாம்பரம் வழியே செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். வழக்கமாக, தாம்பரம் வரையில் செல்லும் பயணிகள் பல்லாவரத்திலே இறங்கி பேருந்துகளில் செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, ஒரே பேருந்தில் அதிகப்படியான பயணிகள் ஏறி கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனால் இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருந்த தாம்பரம் வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இன்று ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும் என்றும், இனி ரயில் சேவை சீரானதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.