கடலூர்: கடலூரில் ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பயிர்சேதம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து, கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், அப்பகுதிகளில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
கடலூரில் சேதம்:
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டங்களுக்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள், தென்பெண்ணை ஆற்றின் கரைகள், விவசாய நிலங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளது. அதனால், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.
மத்திய குழு ஆய்வு:
ஃபெஞ்சல் புயக் காரணமாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் பகண்டை, மேல்பட்டாம்பாக்கம், அழகியநத்தம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, ஞானமேடு ஆகிய இடங்களில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் நேற்று (டிச.08) ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் பொன்னுசாமி, நிதி மற்றும் செலவினங்கள் துறை இயக்குநர் சோனமணி அஹோபம், நீர்வள ஆணைய இயக்குநர் சரவணன், சாலை போக்குவரத்து துறை அதிகாரிதனபாலன் குமார், மின்சார துறை ஆணைய அதிகாரி ராகுல் பக்கேட்டி ஆகியோர் இருந்தனர்.
மேலும், இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மோகன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககந்திப் சிங் பேடி, காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்துள்ளனர்.
ஆய்வு செய்த பகுதிகள்:
பண்ருட்டி அருகே உள்ள பகண்டை பகுதியில் ஆய்வை துவங்கிய மத்திய குழுவினர், தொடர்ந்து மேல் பட்டாம்பாக்கம், அழகியநத்தம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, நாணமேடு ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள், தென்பெண்ணை ஆற்றின் கரைகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்த பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள மத்திய குழுவினர்..!
இதில், அழகிய நத்தம் பகுதியில் ஆற்றில் இருந்து வெளியேறிய நீரால், நெற்பயிர்கள் மணல்மேடுகளாக மாறியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, மத்திய குழுவினர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
பின்னர், மழை சேதம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற மத்திய குழுவினரிடம் மழை பாதிப்புகள் குறித்து வீடியோ காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு வந்த மத்திய குழுவினர், தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் (டிச.07) சனிக்கிழமை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில், மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய குழிவினர் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.