சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசு பெண்களுக்கான கட்டணமில்லா அரசுப் பேருந்து திட்டமான விடியல் பயண திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டத்திலிருந்தே பாராட்டுகளையும், விமர்சனங்களையும் ஒருங்கெ பெற்று வந்த நிலையில், இத்திட்டம் பெண்களின் முன்னேற்றத்திலும், சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதாக சிஏஜி - சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் (Citizen consumer and civic Action) என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சிஏஜி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய 6 நகரங்களில் உள்ள 3 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டம் மூலம் பெண்கள் பேருந்து சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களை பெண்கள் பயன்படுத்துவது குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த திட்டத்தால் பயன் பெறும் பெண்கள் மாதம் தங்கள் வருமானத்தில் 800 ரூபாய் பிடித்தம் செய்ய முடிவதாகவும், இந்த சேமிப்பை கல்வி, சுகாதாரம் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை வழங்குவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இது சமூகத்திற்கான மற்றும் நாட்டிற்கான நீண்ட காலப்பலன்களை அளிப்பதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதிகமான பெண்கள் பொதுப்போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் பெண்களின் நடமாட்டம், பாலின சமத்துவத்தில் சம நிலைப்பாடு ஆகியவற்றை இத்திட்டம் உறுதிசெய்வதும் ஆய்வின் முக்கிய முடிவுகளாக தெரிய வந்துள்ளன.
பெண்கள் அதிகளவில் வெளியில் வருவது, அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில் உள்ள தடைகளை உடைக்க உதவுவதாக பல்வேறு அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, இந்த திட்டத்தை சென்னை போன்று பிற நகரங்களிலும் அதிகளவில் விரிவுப்படுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பணிக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சொந்த வாகனங்களை வைத்திருப்பதில்லை என்றும், அது போன்ற பெண்களுக்கு இந்த திட்டம் சிறந்த போக்குவரத்து சேவையை வழங்குவதாகவும் ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட போது, இத்திட்டமானது பெண்கள் நோக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறவும், ஊர் சுற்றவும் ஊக்குவிக்கிறது என்பன போன்ற எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பெண்களின் சுதந்திரம் அவசியம் என்ற எண்ணத்தில் பார்க்கப்பட வேண்டிய நேர்மறையான சிந்தனையை தூண்டியிருப்பதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் இந்தியாவில் 10ல் 8 ஆண்கள் வெளியில் பணிபுரியும் நிலையில், 10ல் 2 பெண்கள் மட்டும் வெளியில் பணிபுரிவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும், ஒப்பீட்டளவில் இந்தியாவில் பொது இடங்களில் பெண்களை அதிகளவில் பணிக்காக வருவது குறைவாக உள்ள நிலையில், இந்த திட்டம் அதனை ஊக்குவிக்கும் என்றும், அதன் மூலம் மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு போதிய புரிதல் ஏற்பட வழிவகுக்கும் என்று சிஏஜி-யின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி வரலாறு காணாத சாதனை.. 2023-ல் 300 காப்புரிமைகளைப் பெற்றது எப்படி?