சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தலைமையில், நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 'கல்வி விருது விழா' நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதற்கட்டமாக, 21 மாவட்டங்களைச் சேர்ந்த 802 மாணவர்களை நேரில் அழைத்தும் கௌரவித்தார். 802 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழா கிட்டத்தட்ட 10 மணி நேரம் 20 நிமிடம் நடந்தது. நிகழ்ச்சி இறுதி வரை விழா மேடையில் நின்று விஜய் கௌரவப்படுத்தினார்.
இதற்கிடையே, நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், முடிவிலும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த செய்தியாளர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஒட்டுமொத்த செய்தியாளர்களும் பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஒருமையில் பேசியதற்காக செய்தியாளர்களிடம் பவுன்சர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடம் நிபந்தனை வைத்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் செய்தியாளர்களைச் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட பவுன்சரை பத்திரமாக உள்ளே பாதுகாத்து வைத்ததால், செய்தியாளர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சிறிது நேரம் கழித்துச் சம்பந்தப்பட்ட பவுன்சர் வந்து, "இனிமேல் இதுபோன்று தரக்குறைவாக நடந்துகொள்ள மாட்டேன்" என செய்தியாளர்களிடம் மன்னிப்புக் கூறினார். அதையடுத்து, செய்தியாளர்கள் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கல்வி விருது விழாவில் விஜய் பேசிய அரசியல் என்ன?