கோயம்புத்தூர்: பாஜக மாநில தலைவரும் கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கோவை பேரூர் சாந்தலிங்க ஆதீனத்தில் உள்ள மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது அண்ணாமலைக்குப் பேரூர் ஆதீனத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டு, ஆதீன பீடத்தில் அமர்ந்திருந்த பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிவபதிகம் பாடி அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்தும், மலர் கிரீடம் அணிவித்தும் ஆசீர்வாதங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "கோவையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கு காட்டாமலும், தேர்தலைக் காரணம் காட்டாமலும் உடனடியாக சிறுவாணி, பில்லூர் அணைகளில் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அரசியலைத் தாண்டி சிறுவாணி தண்ணீரைப் பெறுவதற்குக் கேரளா அரசுடன் திமுக அரசு பேச முயற்சிக்க வேண்டும். குளங்கள் நீர் வரும் பாதைக்கு மத்திய அரசு பல கோடி நிதிகளை ஒதுக்கினாலும் தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாளுவது இல்லை. ஒரு லட்சம் குளங்களைக் குஜராத் மாநிலங்களில் மக்கள் பங்களிப்புடன் முதலமைச்சராக இருந்தபோது மோடி செய்து காட்டினார்.
தமிழ்நாட்டில் அதே போன்ற தண்ணீர் பிரச்சனை வரக்கூடாது என்பதற்கு மோடிக்கு எண்ணம் உள்ளது. ஆனால் ஆளுகின்ற அரசு முறையாகச் செயல்படுத்துவது இல்லை. அதேபோல, நேரடியாகக் குடி தண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல் சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டும், முறைகேடும் நடைபெற்று வருகிறது.
இதனால் மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுகிறது. எப்போதும் அரசியல் அறம் சார்ந்து இருக்க வேண்டும். ஆன்மீகத்தையும், அரசியலும் பிரிக்கக் கூடாது. எப்பொழுதெல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ அவர்கள் நேரடியாக ஆதீனங்கள் போலக் குருமார்களைச் சந்தித்து அறிவுரைகளைப் பெற்றுச் செயல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.