கோயம்புத்தூர்: "மணிப்பூர் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார், அவர் உட்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு சென்று அங்குள்ள நிலையை விளக்க நான் தயாராக உள்ளேன்",என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆனந்த் டெல்டும்டே , ஆதவ் அர்ஜுனா யார் தெரியும்: அதில் முக்கிய விருந்தினராக வந்தவர் ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்தவர். ஆனந்த் டெல்டும்டே ஒரு அர்பன் நக்சல். இவரது தம்பி மிலிம் தில் தும் படே 2021 ஆம் ஆண்டு கத்திரச்சவுலி வனத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நக்சல்கள் சுட்டுக் கொன்ற போது கொல்லப்பட்டவர். இரண்டாவது விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இவர் லாட்டரி அதிபரின் மருமகனாவர். அவர் திமுகவை மன்னர் ஆட்சி என விமர்சிக்கிறார். மேலும், அவரது மாமனார் தேர்தல் பத்திரங்களின் மூலம் திமுகவிற்கு 581 கோடியை வழங்கி உள்ளார். ஆதவ் அர்ஜுனா சபரீசனுக்கும் மிக நெருக்கமாக இருந்து கடந்த தேர்தலில் பணியாற்றியவர்.
மணிப்பூருக்கு விஜய்யை அழைத்து செல்ல தயார்: மணிப்பூர் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார், அவர் உட்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு சென்று அங்குள்ள நிலையை விளக்க நான் தயாராக உள்ளேன். விஜய் மணிப்பூர் விவகாரம் குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அங்குள்ள பழங்குடியினர் பிரச்சனைகள், மியான்மர் நாட்டிலிருந்து ஊடுருவல், போதை கலாச்சாரம் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மணிப்பூரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை விட பாஜக ஆட்சியில் தான் அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் துப்பாக்கிச் சூடு இதற்கு தீர்வு இல்லை என பாஜக நினைக்கிறது. ஆக்கபூர்வமான ஜனநாயக முறையில் மணிப்பூர் விவகாரத்தில் பேசி தீர்வு காணப்படும்.
அப்போது மன்னர் ஆட்சி என தெரியவில்லை: தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார், அவர் விசிகவில் பொறுப்புக்கு வந்த போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர், அப்போது திமுக மன்னர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது யார்? திமுக குடும்ப ஆட்சி செய்து வருகிறது என்றார், அதை கேட்டும் அக்கட்சி நிர்வாகி அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அதானியின் அறிக்கையை படிக்க வேண்டும். நான் அதானி குறித்து கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்காமல் ஆக்ஸ்போர்ட் போனதை பற்றி பேசுகிறார் செந்தில் பாலாஜி. திமுக அமைச்சர்களுக்கு ஒன்றே ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன் ஆரோக்கியமான அரசியலை செய்யுங்கள். நானும் ஆரோக்கியமான அரசியலை செய்கிறேன். நான் ஆரோக்கியமான அரசியலை செய்ய வந்துள்ளேன்.
இதையும் படிங்க: விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. வெளியான அதிரடி அறிக்கை!
பாலியல் வன்கொடுமை குற்றவாளியை வெளியேவிட்டது ஏன்? சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி வைத்த காவல் துறையினர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை தமிழக டிஜிபியை சந்தித்து பாஜக சார்பில் மனு அளிக்க உள்ளோம்.
சினிமா செய்திகள் பார்ப்பதில்லையா: உதயநிதி ஸ்டாலின் தாத்தா கருணாநிதி சினிமாவிற்கு கதை வசனம் எழுதியவர் தான் ஆனால் தற்போது அவர்கள் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று கூறினால் தமிழகத்தில் சினிமா சரியில்லை என்று ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இவர்கள் வந்த பிறகு தமிழக சினிமா தரம் தாழ்ந்து விட்டது என கூறிகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பொறுப்பில் இருப்பதால் மக்கள் ஒரு பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறார்கள்.
நாளை பாஜக பொதுச்செயலாளர்கள் நிதி அமைச்சரை சந்தித்து, புயல் சம்பந்தமாக அறிக்கைகளை தர இருக்கிறோம். கோவையை பொறுத்த வரை இருக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு, தீர்வு கொடுப்பது எங்களுடைய கடமை. கோவையில் கிழக்கு புறவழிச்சாலை வர வேண்டும், இன்னொரு விமான நிலையம் கூட வரலாம்” என்றார்.
ஐபிஎஸ் அதிகாரி குறித்து சீமான் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “சீமான் அப்படி எல்லாம் இல்லை. நாங்கள் நேர் எதிர் பாதையில் இருக்கிறோம். இதனை பெரிது படுத்தாமல் பிரச்னையை முடித்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை பட்டியலின மக்கள் மிக முக்கியமானவர்கள். பட்டியலின மக்களை மையப்படுத்தி தமிழக அரசியல் நகர்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.