சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் தனது X பக்கத்தில், "இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலில் எவ்விதமான அடக்குமுறையும் இல்லை என அக்கோயில் அர்ச்சகர்கள் விளக்கமளித்துள்ளனர். ஆளுநர் வருகையின் போது, தங்களிடம் செய்தியாளர்கள் திடீரென பேட்டி கேட்டதை மனதில் கொண்டு ஆளுநர் இப்படி கூறியிருக்கலாம் என அர்ச்சகர்கள் இது குறித்து பதிலளித்துள்ளனர்.
வரலாற்று சிறப்பு மிக்க 'அயோத்தி ராமர் கோயில்' கும்பாபிஷேகம் இன்று (ஜன.22) நடைபெற்று வரும் நிலையில், இது நாடெங்கும் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள், அரசியல் போராட்டங்களை தாண்டி மத்தியில் ஆளும் பாஜகவின் தேர்தல் அறிவிப்பின் படி அயோத்தியில் ரூ.18,000 கோடி மதிப்பீட்டில் மிகவும் பிரம்மாண்டமான ராமர் கோயில் 'நகரா' கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.
இதற்காக நாடெங்கும் உள்ள ராமரின் வரலாற்றோடு தொடர்புடைய கோயில்களுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்து வந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் வழிபாடு செய்தார். அதேபோல, ராமரின் வரலாற்றிலும் ராமாயண்த்திலும் இன்றியமையாத இடமாக திகழும் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமநாத சுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பின்னர், அங்குள்ள அக்னி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடிய அவர், ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக புனித நீரைக் கொண்டு சென்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை அனுமதியின்றி நேரலை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நித்தியானந்தா..? வர வாய்ப்புள்ளதா..?