தேனி: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, அவரது மனைவி அனுராதா தினகரன், இன்று முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொண்டு, மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அந்த வகையில், தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தனது கணவர் டிடிவி தினகரனை ஆதரித்து, முதல் முறையாக அவரது மனைவி அனுராதா தினகரன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
திம்மிநாயக்கன்பட்டியில் இன்று தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கிய டிடிவி தினகரனின் மனைவி அனுராதா தினகரன், குக்கர் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அனுராதா தினகரன், “எனது கணவருக்காக உங்களிடம் பேச வந்திருக்கிறேன், முதல் முறையாக திம்மிநாயக்கன்பட்டியில் உங்களுடன் பேசுகிறேன்” எனக் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார்.
டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட போடி மற்றும் கம்பம் சட்டமன்ற பகுதிகளில் தங்களது பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.