சென்னை: ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் கோயில். இந்தக் கோயிலில் கரூவூல புதையல் அறை ஒன்று உள்ளது. இந்த அறையில் மன்னர்கள் தெய்வங்களுக்கு வழங்கிய விலைமதிப்பற்ற ஆபரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறை கடைசியாக 1985ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு அறையை மீண்டும் திறக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து சாவியை தேடியபோது, அதனை காண முடியவில்லை, தற்போது வரை சாவி மாயமாக இருந்து வகுகிறது. இந்தச் சூழலில் நேற்று தேர்தல் பரப்புரைக்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடி, பூரி ஜெகநாதர் கோயிலில் வழிபாடு நடத்திய பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடையே பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் இந்த கோயில் பாதுகாப்பாக இல்லை. அந்த அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது. அதனை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?” என பேசியுள்ளார். தமிழ்நாடு குறித்து பிரதமர் பேசியுள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மோடி பேசிய இந்த பதிவை தன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போல தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.
வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்”, என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மோடி பேசியதற்கு விளக்கமளித்துள்ளார். மேலும் அந்த வீடியோவுடன், இது குறித்து தன் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “தமிழகத்திற்குள்ளும், வெளியிலும் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதுவுமே அறியாமல், நிலைய வித்வான்கள் சூழ்ந்த குழிக்குள்ளே வசிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நமது பிரதமர் மோடி, ஒடிசாவில் பிரச்சாரத்தின் போது பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.
மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது என்பதையும், அந்தப் பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதையும், ஸ்டாலினிற்கு நினைவூட்ட விரும்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.