சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், பேரறிஞருமான அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள, அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வரை தொடர்ந்து துரைமுருகன்,உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் சென்று, அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருப்படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அத்துடன், திமுகவின் பவள விழாவையொட்டி, அண்ணா அறிவாலய கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள பவள விழா லட்சினையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள திராவிட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர்