நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 20 நபர்கள் இறந்து விட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் மருத்துவர் அகஸ்டின் (60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வந்ததாகவும், இதில் 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூடலூர் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் நேற்று அந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது அந்த காப்பகத்தில் 19 நபர்கள் உள்ள நிலையில், அவர்களை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்ப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, இன்று கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மனநல மருத்துவர்கள் விவேக் மற்றும் தேவாலா, துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 20 நபர்கள் எப்படி இறந்தார்கள் என்றும், இயற்கை மரணம் தானா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: செங்கல்பட்டு அருகே இரு பள்ளி மாணவர்கள் மர்ம நபர்களால் காரில் கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை!