சேலம்: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அதன் பரிசீலனை நடைபெற்றது. அந்த வகையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த பாமக வேட்பாளர் அண்ணாதுரையின் காரை பறிமுதல் செய்ய போலீசார் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினரிடம் வேட்பாளர் அண்ணாதுரை மற்றும் உடன் வந்த பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. வேட்பாளரின் காரில் தேர்தல் ஆணைய படிவத்தை ஒட்டவில்லை எனக் கூறியும், காரில் உள்ள கட்சிக் கொடியை அகற்றக் கூறியும் போலீசார் காரை பறிமுதல் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் அண்ணாதுரை, "எனது காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். எங்களிடம் முறையான அனுமதி படிவம் இருந்தும், காவல்துறையினர் எனது காரை பறிமுதல் செய்துள்ளனர். இது ஆளும் திமுகவின் சதி வேலை. திமுக ஆட்சியில் தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்" என தெரிவித்தார்.
மேலும், நேற்று (மார்ச் 27) பாமக வேட்பாளர் அண்ணாதுரை வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது, 100க்கும் மேற்பட்ட பாமகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கோரி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் விவேக் மகளுக்கு திருமணம்.. தந்தை வழியை பின்பற்றி நெகிழ்ச்சி! - Actor Vivek Daughter Marriage