சென்னை: 92வது விமானப்படை தினத்தையொட்டி தாம்பரம் விமானப்படைத் தளத்தில் அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதிவரை விமான சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும், 6ம் தேதி விமான சாகசமும் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்நிகழ்ச்சிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளரும், இந்திய விமானப்படை துணை தளபதியுமான பிரேம் குமார் ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.
இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த விமானப்படை வான்வழி சாகச நிகழ்ச்சி தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது என பிரேம் குமார் குறிப்பிட்டார். அரக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூலூர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து 72 விமானங்கள் தாம்பரம் வந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன.
வரும் 6ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வான் வழி சாகசத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்படும் விமானங்கள், கோவளத்திலிருந்து சென்னை மெரினாவரை கடற்கரையை அலங்கரித்தவாறு பறக்க உள்ளன என பிரேம் குமார் குறிப்பிட்டார். இந்த கடற்கரை மார்க்கத்தில் நீங்கள் இருந்தால், விமானங்களின் சாகசங்களை கண்டுகளிக்கலாம்.
மேலும் விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு சென்னை மெரினாவில் சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறிய பிரேம் குமார், இதனை உலக சாதனையாக நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். சென்னையின் அனைத்து மக்களும் இதனை கண்டு களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு முன்பு கடந்த 2003ஆம் ஆண்டு விமானப்படை தினத்தன்று சென்னையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, தற்போது 23 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை மெரினாவில் விமானப்படை தினத்தன்று விமான சாகசங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் பிரேம் குமார் கூறினார்.
இதையும் படிங்க: வேலூர் அருகே ஒரே கிராமத்தில் 3000 ராணுவ வீரர்கள்.. கம்மவான்பேட்டை ராணுவப்பேட்டையாக மாறிய ரகசியம் என்ன?
இந்திய விமானப்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி நிறுவப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் அக்டோபர் 8ஆம் தேதி அன்று நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படைத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வரும் அக்டோபர் 8ஆம் தேதி 92வது இந்திய விமானப்படை தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. மேலும், ஒவ்வொரு இந்திய விமானப்படை தினத்தன்று டெல்லியில் விமானப்படை சாகசங்கள் (airshow) மற்றும் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்திய விமானப்படை வீரர்கள் நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், 92வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஏர்ஷோ எனப்படும் விமான சாகச நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அக்டோபர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சிகளும், சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு பயிற்சியும் நடத்தப்படுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி வான்வழி சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8ஆம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்