சென்னை: ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ள ஏர் பஸ் A 350 ரக அதிநவீன சொகுசு விமானம் சோதனை அடிப்படையில் நேற்று (ஜன.22) மும்பையிலிருந்து சென்னைக்கும் அதன் பின், பெங்களூருக்கும் இயக்கப்பட்டது.
இந்த விமானம் பறக்கும் போது மிகக் குறைந்த அளவே கார்பன் டை ஆக்சைடையே வெளியேற்றும் எனவும் இதனால் காற்று மாசுபடாததோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த ஏர் பஸ் A 350 ரக விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ளது. இதில் 350 பயணிகளிலிருந்து 400 பயணிகள் வரை பயணம் செய்ய வசதி உள்ளது. மேலும் இந்த விமானம் எரிபொருளை மிகுந்த சிக்கனமாகக் கையாளும் தன்மையுடையது. இதனால் இந்த விமானம் 25% எரிபொருளைச் சேமிக்கும் என கூறப்படுகிறது.
மும்பையிலிருந்து நேற்று (ஜன.22) காலை 11.25 மணிக்குப் புறப்பட்ட இந்த அதிநவீன ஏர் இந்தியா விமானம் பகல் 12.48 மணிக்குச் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து பிற்பகல் 2.17 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 2.54 மணிக்குப் பெங்களூர் சென்றடைந்தது. மும்பை-சென்னை இடையே வழக்கமாக விமான பயண நேரம் 120 நிமிடங்களாக உள்ள நிலையில் (2 மணி நேரம்) இந்த விமானம் நேற்று 83 நிமிடங்களில் (1 மணி 23 நிமிடங்கள்) மும்பையிலிருந்து சென்னை வந்துள்ளது.
அதைப்போல் சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு வழக்கமான பயண நேரம் 70 நிமிடங்கள். ஆனால், இந்த விமானம் நேற்று சென்னையிலிருந்து பெங்களூருக்கு 37 நிமிடங்களில் சென்றடைந்தது. இந்த விமானம் பறக்கும் போது மிகக் குறைந்த அளவே கார்பன் டை ஆக்சைடையே வெளியேற்றும் எனவும் இதனால் காற்று மாசுபடாததோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அதோடு இந்த விமானம் வானில் பறக்கும் போதும், புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தாமல் காற்றில் மிதந்தபடி அதிவேகமாகப் பறந்து செல்லக்கூடியது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ள இந்த அதிநவீன சொகுசு விமானத்தைச் சோதனை அடிப்படையில் மும்பையிலிருந்து சென்னைக்கும் அதன் பின்பு, பெங்களூருக்கும் இயக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இது போன்ற பெரிய ரக அதிநவீன விமானம் நேற்று தான் முதல் முறையாகச் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம் தான் இந்த விமானத்தை இந்தியாவிற்குள் இயக்கத் தொடங்கியுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விமானத்தை கண்டுபிடித்த நீர் மூழ்கி.. முதல் காட்சியை வெளியிடும் ஈடிவி பாரத்!