தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சியில் 4 மாத போராட்டத்திற்குப் பிறகு நகர்மன்றக் கூட்டம், நேற்று (பிப்.9) நகர் மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டு மக்களின் தேவைகள் குறித்து, நகர்மன்றத் தலைவியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா இடைமறித்து தேவையற்ற கருத்துக்களை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கற்சிலையை வைத்தால் அவ்விடம் கோயிலாகுமா என்று மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் கருத்துகளை கூறியதாகவும் புகார் எழுந்துள்ளது.
அதற்கு, அதிமுகவின் நகர்மன்ற துணைத் தலைவர், சங்கரன்கோவில் நகராட்சி ரூ.25 கோடிக்கு மேல் கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் இருப்பதால், வார்டு மக்களின் சிறிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் நகர்மன்ற உறுப்பினர்கள் திணறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, கூட்டத்தில் பேசவிடாமல் தடுத்த நகர்மன்றத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, நகர் மன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் நகர் மன்றக் கூட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை எதிர்த்து, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இதையும் படிங்க: மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி!