சென்னை: தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி உள்ள நிலையில், கடைசி நாளான இன்று (மே 24) மட்டும் 5,865 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டைப் போலவே மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்தப்பின்னர், ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 27ந் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. அந்த தர வரிசையின் அடிப்படையில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்காக சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மே 6ஆம் தேதி முதல் 25 வரையில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் பதிவு செய்த ஒவ்வொருக் கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் மே 27ஆம் தேதி அனுப்பப்படுகிறது.
அதனைத் தாெடர்ந்து, மே 28 முதல் 30 தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை, பாதுகாப்புபடை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10ந் தேதி முதல் 15ந் தேதி வரையிலும், 2ம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29 தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ஆம் தேதி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: ஆஃப் பாயில் சாப்பிட்டால் ஆபத்து! பரவும் பறவைக் காய்ச்சலால் எச்சரிக்கை - Bird Flu Health Advisory