திண்டுக்கல்: பழனி - கொடைக்கானல் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, பழனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டமாகப் படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, ஊட்டி, கொடைக்கானலில் வரும் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை (E Pass) அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம், இ-பாஸ் நடைமுறை கொண்டு வந்துள்ள நிலையில், இன்று முதல் அவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிதம்பரம், கடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று சுற்றுலா வந்த 20க்கும் மேற்பட்டோர், கொடைக்கானலைச் சுற்றி பார்த்துவிட்டு பழனிக்கு வந்து கொண்டிருந்த நிலையில், கொடைக்கானல் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 20 பேரில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி போலீசார், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒருவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "இது ஒரு புரியாத புதிர்.. ஜெயக்குமார் விவகாரத்தில் சதி”.. கே.வி.தங்கபாலு பிரத்யேக பேட்டி! - KV Thangkabalu On Jayakumar Death