சென்னை : ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக மலேசியா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி உடல் நலம் பாதிக்கப்பட்டு, விமானம் மூலம் சென்னை திரும்பிய போது விமானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய போலீசார் கூறுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவருடைய மனைவி ராசாத்தி (37). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ளார். அங்கு, சில வீடுகளில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராசாத்திக்கு நுரையீரல் பாதிப்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராசாத்தியால் வேலை செய்ய முடியாமல் போனதால், வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இன்று காலை சென்னைக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க : சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவை... நிறைவேறிய தமிழர்களின் கோரிக்கை..!
அப்போது விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ராசாத்திக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தையடுத்து, விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பயணி ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர், விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பெண் பயணியை பரிசோதித்தனர். ஆனால், பயணி ராசாத்தி விமான இருக்கையில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். மேலும், ராசாத்திக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததால், அதன் காரணமாக ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் இறந்த பெண் பயணியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக" சென்னை விமான நிலைய போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்