திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர், கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60). இவர் கடந்த மே 2ஆம் தேதி இரவு காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மே 4ஆம் தேதி திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
முன்னதாக ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில், காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களான கே.வி தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட பலரது பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களால் தனக்கு மன உளைச்சல் மற்றும் ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ஜெயக்குமாரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என முதலில் போலீசார் சந்தேகப்பட்டனர்.
ஆனால், ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டபோது அவரது கை, கால்கள் இரும்புக் கம்பியால் பின்பக்கமாக பலகையுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. மேலும், உடல் எரிந்து பாதி கருகியிருந்தது. இதன் மூலம் ஜெயக்குமார் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என தெரியவந்தது.
மேலும், இறந்தவரின் உடலை எரித்தால் மட்டுமே நுரையீரலில் திரவங்கள் இருக்காது, அதுபோலவே ஜெயக்குமாரின் பிரேதப் பரிசோதனை முடிவில், ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவும் தங்கவில்லை என தெரிய வந்தது. இதன் மூலம் ஜெயக்குமார் எரிக்கப்படுவதற்கு முன்பே இறந்திருக்க வேண்டும் என வல்லுநர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
யார் அந்த பெண்? தற்போது இந்த வழக்கை 8 தனிப்படையினர் விசாரித்து வரும் நிலையில், ஜெயகுமார் மற்றொரு பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜெயக்குமாரின் மகனுக்கு அண்மையில் மும்பையில் இருந்து தொடர்ச்சியாக செல்போன் அழைப்புகள் வந்திருப்பதும், ஜெயக்குமார் மகன் செல்லிலிருந்தும் அந்த எண்ணுக்கு அடிக்கடி கால் சென்றிருப்பதையும் தனிப்படை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த பெண் யார்? அந்த எண் யாருடையது என்பது தெரிந்த பிறகே போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவர்.
கராத்தேவில் பிளாக் பெல்ட்: இந்த பரபரப்பான சூழலில், ஜெயக்குமார் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, ஜெயக்குமார் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். மேலும், அவர் படிக்கும் போது கராத்தேவில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார்.
இதனால் கராத்தே வகுப்பில் கலந்து கொண்டு பிளாக் பெல்ட் வாங்கியதும் தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் உடல் திடகாத்திரமுடன் இருந்திருக்க வேண்டும். எனவே, ஒருவேளை அவர் கொலை செய்யப்பட்டிருந்தால், முடிந்தவரை தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்திருப்பார் என அறியப்படுகிறது. ஜெயக்குமார் தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா? வீட்டுக்குள்ளேயே நடந்த சதியால் வீழ்த்தப்பட்டாரா? அல்லது பெண் பழக்கத்தினால் ஏற்பட்ட தகராறா ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணுடன் ரகசிய பேச்சு? 'மும்பை போன் கால்'.. ஜெயக்குமார் வழக்கில் பகீர் திருப்பம் - Nellai Jayakumar Case Update