திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த மைதீன் பிச்சை என்பவருக்கு சொந்தமாக, அதே பகுதியில் உள்ள சேரன்மாதேவி பிரதான சாலையில், மரம் மற்றும் இரும்பு உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது.
இந்த சூழலில், மைதீன் வழக்கம்போல கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று (செப்.28) இரவு வீடு திரும்பிய நிலையில், திடீரென அவரது கடையில் தீ பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மைதீன் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் கடையில் உள்ள பொருட்கள் மளமளவென எரிய தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வாகனத்தின் மூலம் தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. விற்பனை நிலையத்தில் இருந்த பொருட்களில் பெரும்பான்மையானவை மரம் உள்ளிட்டவைகள் என்பதனால் தீ எரியும் வேகம் அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து, சேரன்மகாதேவி மற்றும் பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; உரிமம் தற்காலிக ரத்து!
மேலும், தனியார் மரக்கடையில் தீ கொழுந்து விட்டு எரியும் நிலையில் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்து சாலையில் குவிந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் விடிய விடிய சுமார் 14 மணி நேரமாக தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்த நிலையில், தீயணைப்புத் துறையினரும் முழு வீச்சுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தவகையில் தொடர்ச்சியாக போராடிய தீயணைப்பு வீரர்கள் சுமார் 17 மணிநேர நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் நெருப்பினை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த நிலையில், தற்போது சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்திற்கு காரணம் மின்கசிவா? அல்லது வேறு யாரேனும் செய்த சதி செயலா? என்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்