திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், புலிவலம் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவரது மகன் கோதர் மைதீன் (19). பஷீர் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், மகனின் ஆசைக்கிணங்க ரூ.3 லட்சம் மதிப்பில் விலையுயர்ந்த பைக் ஒன்றை மகனுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் கோதர் மைதீன், தினமும் அந்த பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ் போடுவதை முழு நேர வேலையாகச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நாகூர் தர்கா சாலை, நாகூர் கடற்கரை, சிபிசிஎல் அலுவலகம், திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை என பல்வேறு இடங்களில் வீலிங் செய்து, ரீல்ஸ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கங்களாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது தங்கை அர்ச்சனா ஆகிய இருவரும், நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், கல்லூரி முடிந்து புதிய பேருந்து நிலைய காப்பகத்தில் வைத்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு, புலிவலம் அருகே வேலங்குடி பகுதியில் உள்ள சித்தி வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, வேலங்குடி ரயில்வே கேட் அருகே வீலிங் செய்து கொண்டிருந்த கோதர் மைதீன் ஸ்கூட்டி மீது மோதியதில், மாணவிகள் இருவரும் காயமடைந்தனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மாணவிகளை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், இளைஞர் கோதர் மைதீன் வீலிங் செய்து ரீல்ஸ் போடுவதையே வாடிக்கையாக வைத்திருந்ததும், இதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஆர்த்தி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர் கோதர் மைதீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: "பாஜக கொண்டு வந்த பல பாதகமான சட்டங்களை இந்தியா கூட்டணி திருத்தும்" - திருச்சி எம்பி சிவா!