கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே புதுச்சேரி மாநிலத்தை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இந்த தரைப்பாலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, திடீரென தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்த கார், தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, காரில் பயணித்த ஐந்து நபர்களும், காருக்குள் மாட்டிக்கொண்டு தத்தளித்தனர். பின்னர், காரின் கதவை உடைத்து தண்ணீரில் நீந்தி கரையேறி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாலன், சுந்தர் உள்பட ஐந்து பேர் கடலூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் புதுச்சேரி மாநிலம், வில்லியனூருக்குச் செல்வதற்காக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வரும்போது, கனமழை காரணமாக நிலை தடுமாறி, எதிர்பாராத விதமாக தென்பெண்ணையாற்றில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தண்ணீரில் மூழ்கிய காரை பொக்லைன் இயந்திரம் மூலம் கயிறு கட்டி மீட்டனர்.
இதையும் படிங்க: மின் நுகர்வோர்களுக்கு புதிய அப்டேட் வந்தாச்சு! என்ன தெரியுமா? - Tangedco