திருப்பூர்: அவிநாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானதாக உள்ள இந்தக் கோயில், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலம் என்பதும், அவர் பாடிய பதியகம் மூலம் முதலை உண்ட மதலையை மீட்ட தலம் என்பது சிறப்பானதாகும். இப்படிப்பட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா பிப்.2ஆம் தேதி நடைபெற்றது.
அதாவது, 250க்கும் மேற்பட்ட உபயதாரர்கள் சேர்ந்து, ரூ.4 கோடிக்கும் மேல் திருப்பணிகள் செய்யப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில், ஒரு குழு அமைத்து தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கோயில் நிர்வாகம் சார்பில், தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மண்டல பூஜைக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிட முடிவு செய்து, அவிநாசியில் உள்ள 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழுவினர் அன்னதானம் வழங்கும் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
இதன் மூலமாக, கும்பாபிஷேகம் நடந்த 2ஆம் தேதி முதல் தினமும் தொடர்ச்சியாக 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக எல்லா நாளிலும் பக்தர்களுக்கு கிடைக்கும் வண்ணம் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழுவினர் இந்த அன்னதான பணிகளை செய்து வருகின்றனர். 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழுவினை சேர்ந்த அண்ணா உணவகம் பூபதி, சீனிவாசன் உள்ளிட்டோர் பலரையும் நேரில் சந்தித்தும், தொலைபேசியில் பேசியும் ஒருங்கிணைக்கின்றனர்.
இது குறித்து அன்னதான ஒருங்கிணைப்பு செய்து வரும் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழுவில் உள்ள சீனிவாசன் கூறுகையில், "அவிநாசி லிங்கேஸ்வரர் அருளால் தினமும் குறைந்தபட்சம் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். இதற்காக பொதுமக்கள், வணிகர்கள், முக்கியஸ்தர்களைச் சந்தித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அன்னதானம் வழங்குபவர்கள், அவர்களே ஏதாவது ஒருவகை உணவு தயார் செய்து தருகிறார்கள்.
அறங்காவலர் குழுவினரும், இந்து அறநிலையத் துறையும் செட் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட உதவிகள் செய்து தந்திருக்கிறார்கள். சமைப்பதற்கு இடமும் வழங்கி இருக்கிறார்கள். அன்னதானத்தில் நெய் மிளகு பொங்கல், வெஜிடபிள் ரைஸ், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், இனிப்புகள் என பல்வேறு வகை உணவுகளை அன்னதானம் வழங்குபவர்களே கொண்டு வந்து கொடுக்கிறார்கள். 8 இன்ச் பாக்கு மட்டை பிளேட், தண்ணீர் கேன் என அனைத்தும் வழங்கப்படுகிறது.
அன்னபூர்ணா, தண்ணீர் கேன் தருகிறார்கள். அன்னதானம் வழங்க கொடையாளர் இல்லாத நாளில், நண்பர்கள் உதவியுடன் நடைபெறுகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட கூட்ட நாட்களில் 2 முதல் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எல்லாமே அவிநாசியப்பர் அருளால்தான் நடக்கிறது.
நாளைக்கு ஆள் இல்லை என்று நினைத்து சுற்றி வருவதற்குள் அன்னதானம் கொடுப்பதற்கு யாராவது முன்வந்து விடுகிறார்கள். கெளரி தங்கமாளிகை சிறப்பாக செய்து தர இருக்கிறார். தீர்த்தக்குடம் எடுத்தபோது, மிகச்சிறப்பாக உணவு ஏற்பாடு செய்து தந்திருந்தார். 48வது நாள் மதியம் முழு உணவு சிறப்பாக வழங்க இருக்கிறார். 47வது நாளும், 48வது நாளும் 3 வேளைகளும் வழங்கிட திட்டமிட்டு இருக்கிறோம். மண்டல பூஜை நாட்களில் அன்னதானம் வழங்க விரும்புபவர்கள் வழங்கலாம்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் வழங்க விரும்புபவர்கள் அண்ணா உணவகம் பூபதி: 9487593330, சீனிவாசன்: 9842260166 ஆகியோரை அழைத்து தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி!