சேலம்: நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று ( வெள்ளிகிழமை) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 29,28,122 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 3260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல் முதல் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.
இருவர் உயிரிழப்பு: இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த சின்ன பொண்ணு என்ற 77 வயதான மூதாட்டி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வாக்களிக்க இன்று காலை சென்றார்.
சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்பட்ட சின்னப் பொண்ணு வாக்களிக்க சென்றபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் மயங்கி விழுந்து அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதேபோன்று சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க சென்ற பழனிசாமி என்ற 65 வயதுடைய பழனிசாமி என்ற முதியவர் தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றார்.
பின்னர் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தபோது அவர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் முதியவர் பழனிசாமியை அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பழனிசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வாக்குப்பதிவு மையங்களில் முதியவர்கள் வாக்களிக்க உதவிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் இந்த பரிதாப சம்பவங்கள் அரங்கேறியுள்ளது வாக்காளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் இல்லங்களிலேயே தபால் வாக்கு அளிக்கும் முறையை செயல்படுத்தியது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இது போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும் அப்போதுதான் வெயிலின் தாக்கம் முதியோர்களை பாதிக்காத வகையில் இருக்கும் என வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கையில் பூத் சில்ப் இல்லை என்று கவலை வேண்டாம்.. ஆன்லைனில் அறிய இதோ வழிமுறைகள்!