சென்னை: இரவு வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய நிலையில், 11 மாத குழந்தை வீட்டு வாசலில் இருந்த பக்கெட்டில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மகாலட்சுமி நகர் முத்தமிழ் தெருவில் இரண்டு வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் விசுவநாதன் (27). இவருக்கு உமாதேவி (26) என்பவருடன் திருமணமாகி 11 மாத குழந்தை இருந்தது. விஸ்வநாதன் அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (மே 30) இரவு வழக்கம் போல் அவர்கள் வீட்டில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது, காற்று வரவில்லை என்பதால் வீட்டின் முன் பக்க கதவை திறந்து வைத்துவிட்டு, குழந்தையுடன் படுத்து உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
இதையடுத்து, இன்று அதிகாலை 1:30 மணியளவில் எழுந்து பார்த்தபோது, உடன் படுக்க வைத்திருந்த 11 மாத கைக்குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே சென்று குழந்தையை தேடிப் பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டில் குழந்தை தவறி விழுந்து பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது. இதையடுத்து குழந்தையை மீட்ட பெற்றோர், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.