சென்னை: நடப்பாண்டின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, இந்தியா vs தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக சாம்பியன் (world championship) பட்டத்தைத் தன்வசப்படுத்தியது, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. மேலும், இந்த டி20 இறுதிப் போட்டியில், விராட் கோலி 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 76 ரன்கள் எடுத்து இந்தியா அணியின் வெற்றி வாய்ப்பிற்கு வித்திட்டார். இதுவே, அணிக்கு எதிராக இந்தியா அணி 7 ரன்களில் வெற்றி பெற அடித்தளமாக அமைந்தது.
இறுதிப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பின்னர் பேசிய விராட் கோலி, "இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை போட்டி. உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்று எப்போதும் நான் கனவு கண்டுள்ளேன். அது தற்போது நனவாகியுள்ளது.
இனி இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம், டி20 யை அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இது எனக்கு 6வது டி20 உலகக் கோப்பைப் போட்டி, ரோகித் சர்மாவுக்கு 9வது டி20 உலகக் கோப்பைப் போட்டி" என்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலி, தன்னுடைய டி20 உலகக் கோப்பைப் போட்டிகளின் நினைவுகளை உணர்ச்சி பொங்க ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார்.
விராட் கோலி டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இதேபோல, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தானும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் டி20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியான தருணத்தில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது எப்படி?