கயானா: 20 அணிகள் பங்கேற்று நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 18வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியானான வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகள் மோதின.
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மேன் பவல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் பிரண்டன் கிங் 13 ரன்களுக்கு வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 3 சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டிய நிலையில் 22 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
மறுபுறம் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சார்லஸ் 44 ரன்கள் விளாசி இருந்தநிலையில் தினேஷ் நக்ரானி வீசிய பந்தில் அல்பேஷ் ரம்ஜானியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோவ்மேன் பவல் 23 ரன்களுக்கும், ரூதர்ஃபோர்ட் 22 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் 17 பந்துகளில் 30 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. உகண்டா அணி தரப்பில் மசாபா 2 விக்கெட்டும், தினேஷ் நக்ரானி, காஸ்மாஸ் கியூட்டா, அல்பேஷ் ரம்ஜானி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகண்டா அணி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 12 ஓவர்கள் முழுவதும் எதிர் கொண்ட உகாண்டா 38 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் ஜூமா மியாகி 13 ரன்கள் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தை நெருங்கவில்லை. இதனால் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகேல் ஹொசைன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இங்கிலாந்து.. சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல்?