சென்னை: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி சென்னை, மும்பை, லக்னோ, குஜராத், ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறவுள்ளது.
முன்னதாக, கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “எங்கள் மனதில் நான் தெளிவாக இருக்கிறேன். பரஸ்பரமான மரியாதை எல்லாம் இருக்கிறது.
நான் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருக்கிறேன், அவர் சிஎஸ்கே அணியில் இருக்கிறார். போட்டியில் வெற்றி என்பதுதான் முக்கியம். இதே கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்டாலும் இதே பதிலைத்தான் கொடுப்பார்” என்றார்.
இதனையடுத்து தேனியின் பேட்டிங் திறமை குறித்து கம்பீர் பேசியதாவது, “ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையிலும் கூட எம்எஸ் தோனி ஸ்டிரைக்கில் இருந்தால், அவரால் போட்டியை வெற்றி பெற வைக்க முடியும். அதேபோல், போட்டியின் 6 அல்லது 7வது இடத்தில் இறங்கி தோனி பேட் செய்வார். அவர் இருக்கும் வரை போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தோனி இந்தியாவிற்கு வெற்றிகரமான கேப்டனாக இருந்து உள்ளார். நீங்கள் மற்ற எந்த தொடர்களில் வேண்டுமானாலும் கோப்பையைக் கைப்பற்றலாம். ஆனால் 3 ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதான காரியம் அல்ல. அதேபோல், ஐபிஎல்-ல் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து விளையாடக்கூடிய எம்.எஸ்.தோனி, களத்தில் நுட்பமாக செயல்படக்கூடியவர். ஒவ்வொரு பந்துவீச்சாளர்களுக்கும் எவ்வாறு களம் அமைப்பது என்பதை நன்கு அறிந்தவர்.
இருப்பினும், எல்லா நேரங்களிலும் அவர்களைவிட நாம் (கொல்கத்தா அணியினர்) முன்னணியில் இருக்க வேண்டும். ஏனென்றால், கடைசி பந்து வீச்சு வரையிலும் வெற்றிக்காக போராடுபவர்கள் சென்னை அணி. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்கும் பந்துவீச்சு தாக்குதல் எங்களிடம் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சிஎஸ்கே? கொல்கத்தவுடன் இன்று மோதல்! - IPL 2024 CSK Vs KKR