டெல்லி : மகளிருக்கான டபிள்யு.பி.எல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச்.5) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. இதில் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் 132 புள்ளி 1 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.
மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக வீசப்பட்ட டெலிவிரியாக இது பதிவாகி உள்ளது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக வீசப்பட்ட அதிவேக டெலிவிரியாக இது பதிவாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சப்னிம் இஸ்மாயில் அந்நாட்டு அணிக்காக ஏறத்தாழ 16 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற சப்னிம் இஸ்மாயில் தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதிவேகமாக பந்துவீசக் கூடியதில் திறமைசாலியான சப்னிம் இஸ்மாயில், கடந்த 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி உள்ளார்.
அதற்கு முன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை 127 கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். ஏறத்தாழ 16 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணிக்காக 127 ஒருநாள், 113 டி20 கிரிக்கெட் போட்டிகளில் சப்னிம் இஸ்மாயில் விளையாடி உள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 317 விக்கெட்டுகளை சப்னிம் இஸ்லாமியில் வீழத்தி உள்ளார். அதில் 3 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 123 டி20 விக்கெட்டுகளும் அடங்கும். டபிள்யு.பி.எல். கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனில் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை விலைக்கு வாங்கியது.
நேற்று (மார்ச்.5) நடந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லேனிங் (53 ரன்) ஜேமியா ரோட்ரிக்ஸ் (69 ரன்) ஆகியோரின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : சன்ரைசஸ் ஐதராபாத் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்! எய்டன் மார்க்ராம் நீக்கம்! பின்னணி என்ன?