மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்த்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது. வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது மும்பை இந்தியன்ஸ். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சாட் 5 ரன்களிலும், நரைன் 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்த வந்த குவன்சி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 6 ரன்னிலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
இதன் பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் 9 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால், பவர் பிளே முடிவதற்குள் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, கொல்கத்தா. இதனையடுத்து இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய மணிஷ் பாண்டே - வெங்கடேஷ்வுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் இணைந்து சரிவில் இருந்த கேகேஆர் அணியை மீட்டனர். இதில் அதிரடியாக விளையாடிய, வெங்டேஷ் அரைசதம் விளாசினார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய மணிஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஸ்ஸல் 9 ரன்களுக்கு அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
இதனால், 19.5 ஓவர்களில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பை அணி தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, மும்பை இந்தியன்ஸ்.
இஷான் கிசான் மற்றும் ரோகித் சார்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் இஷான் கிசான் 13 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய நமன் திர் 11 ரன்களுக்கும் அவுட்டாகினர். மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோகித் 11 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
சுழல், வேகம் என இரண்டு வகையான பந்து வீச்சாளர்களை வைத்து தரமாக பந்து வீசியது, கேகேஆர். இதனால், 71 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, மும்பை. திலக் வர்மா 4 ரன், வதேரா 6 ரன், கேப்டன் ஹார்திக் பாண்டியா 1 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினர்.
இதன் பின்னர் சூர்ய குமார் யாதவ் - டிம் டேவிட் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்த அணியை மீட்டனர். இதில் அதிரடியாக விளையாடிய, சூர்ய குமார் 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால், 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மும்பை இந்தியன்ஸ். கேகேஆர் அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும்; வருண், நரைன், மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 3-ல் வெற்றி 8-ல் நடப்பு தொடரில் மும்பை அணி 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 3 வெற்றி, 8 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்தது.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட் தரவரிசை: ஒருநாள், டி20 தொடர்ந்து இந்தியா முதலிடம்! ஆனா டெஸ்ட் கிரிக்கெட்ல..?