ஹைதராபாத்: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசியது, இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்களை வீழ்த்தியது என இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். இதில் ஆட்டத்தின் 58 ஆவது ஓவரில் வங்கதேச வீரர்
மெஹிதி ஹசன் மிராஸை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் அந்த இன்னிங்சில் ஐந்து விக்கெட்களை கைப்பற்றி அஸ்வின் வரலாற்று சாதனைப் படைத்தார். அதாவது இதற்கு முன், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். சென்னை போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் வார்னேவினஅ இந்த சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.
சாதிக்க வயது தடையில்லை: அத்துடன், சாதிக்க வயது ஒரு பொருட்டல்ல என்பதையும் அஸ்வின் நிரூபித்துள்ளார். இதற்கு முன், இந்திய அணியின் ஆல் ரவுண்டராக விளங்கிய விணு மான்கட் கடந்த 1955 இல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அப்போது அவருக்கு வயது 37 மற்றும் 307 நாட்கள். இந்த 68 ஆண்டுகளாக சாதனையை தற்போது முறியடித்துள்ளார் 38 வயது மற்றும் ஐந்து நாட்களான அஸ்வின்.
இதையும் படிங்க:அஸ்வின் சுழலில் சிக்கிய வங்கதேசம்.. 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
சென்னை டெஸ்ட் மேட்ச்சையும் சேர்த்து, ஒரே போட்டியில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்களை நான்கு முறை எடுத்துள்ளார் அஸ்வின். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்கள் எடுத்த ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் இயன் போத்தம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து முறை சதம் மற்றும் ஐந்து விக்கெட்களை எடுத்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கும்பளேவை விஞ்சிய அஸ்வின்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது இன்னிங்சில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன், நான்காவது இன்னிங்சில் அனில் கும்பளே எடுத்திருந்த 94 விக்கெட்கள் சாதனையை வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் முறியடித்துள்ளார்.