சென்னை: டிஎன்பிஎல் என்று அழைக்கப்படக்கூடிய தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹாட்ரிக் பட்டத்தை எதிர்நோக்கி லைகா கோவை கிங்ஸ் அணியும், முதல் பட்டத்தைக் குறிவைத்து திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அந்த அணி பவர்ப்ளேவில் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தாலும் 3 முக்கிய விக்கெட்களையும் இழந்தது.
குறிப்பாக முதல் குவாலிஃபையரில் 1 சதமடித்து ஆட்டநாயகனாக ஜொலித்த சாய் சுதர்சன் 14 ரன்களில், விக்னேஷ் சுழலில் விக்கெட் இழந்து வெளியேறினார். ஒரு பக்கம் விரைவாக ரன் சேர்க்க முயற்சித்தாலும், கோவை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
கோவை அணியின் நட்சத்திர வீரர் கேப்டன் ஷாருக்கான் (3) திண்டுக்கல்லின் வியூகத்தில் சிக்கி முக்கியத் தருணத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் மிடில் ஆர்டர் மேட்ஸ்மேன்கள் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக விளையாடினர். ராம் அர்விந்த் (27) மற்றும் அத்திக் உர் ரஹ்மான்(25) ரண்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் ரன் பெரிதாக சோபிக்கவில்லை.
🏏 Lyca Kovai Kings end their #TNPL2024 campaign as the runners-up.
— TNPL (@TNPremierLeague) August 4, 2024
👏 Despite the loss in the final, it was a memorable campaign for the boys in blue#LKKvDD #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/3pfbRxsU2I
திண்டுக்கல் அணி சிறப்பான ஃபீல்டிங் மூலம் பல ரன்களை டிபைன் செய்ததோடு அற்புதமான கேட்ச்சுகளை பிடித்து அசத்தினர். அதிலும் சரத் குமார் 4 கேட்ச்சுகளை பிடித்து அசத்தினார். இதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் ஃபீல்டராக அதிக கேட்ச்சுகளை எடுத்த 3வது வீரர் என்ற சாதனையைப்படைத்தார்.
பௌலிங்கைப் பொறுத்தவரை கடந்தப்போட்டியில் கலக்கிய இளம் சுழற்பந்துவீச்சாளர் விக்னேஷ் மீண்டுமொரு முறை சிறப்பாக செயல்பட்டு 4 ஓவர்களில்வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு பக்கபலமாக நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து திண்டுக்கல் அணி 130 என்ற இலக்கை நோக்கி தங்கள் இன்னிங்சை தொடங்கி விளையாடினர்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்.வி.குமார் மற்றும் இம்பாக்ட் பிளேயராக எஸ்.சிங் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ஆர்.வி.குமார் 9 ரன்னிற்கும், எஸ்.சிங் 4 ரன்னுக்கும் ஆட்டமிழந்ததை தொடர்ந்து திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் களம் இறங்கினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 46 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார்.
அவருக்கு பக்கபலமாக விளையாடிய பாபா இந்திரஜித் 27 ரன்களை எடுத்தார். இதனால் கோவை அணி நிர்ணயித்த 130 என்ற இலக்கை 18.2 ஓவர்களில் எட்டியது திண்டுக்கல் டிராகன்ஸ். இதன் மூலம் முதன் முறையாக டிஎன்பிஎல் கோப்பை தட்டி தூக்கியது திண்டுக்கல் டிராகன்ஸ்.
TNPL 2024-ன் மணிமகுடத்தில் தங்களோட பெயரை பதிய வெச்சுட்டாங்க Dindigul Dragons! 🏆🥳#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/00yaGgqbHj
— Star Sports Tamil (@StarSportsTamil) August 4, 2024
ஆட்டநாயகன்: இறுதி போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அதிரடி காட்டிய அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஷாருக்கான் தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று யார் யாருக்கெல்லாம் போட்டிகள்? முழுத் தகவல்!