சென்னை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.8) இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 22வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்ற சென்னை அணி அடுத்த இரண்டு ஆட்டங்களில் தோல்வியை கண்டு புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு இறங்கியது. புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது தான் கேப்டன் எதிர்கொள்ளும் சிக்கல்களை குறித்து அனுபவம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆட்டங்களிலும் சென்னை அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில், இன்றைய ஆட்டம் சென்னையில் நடப்பதால் சொந்த மண்ணில் வெற்றி பெற்று மீண்டும் வீறுநடை போட சிஎஸ்கே அணி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கொல்கத்தா அணியை பொறுத்தவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி நல்ல பார்மில் உள்ளது.
சொந்த மண்ணில் சென்னை அணியை எதிர்கொள்வது கொல்கத்தா அணிக்கு சற்று கடினமான விஷயம் தான். வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆந்திரே ரஸ்செல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
இதையும் படிங்க : செஸ் கேண்டிடேட்: 3வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி! - Chess Candidates 2024