மாஸ்கோ : கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்திராத நேரத்தில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்தது. இன்றுடன் (பிப்.24) ரஷ்யா அறிவித்த ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் உக்ரைன் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து உள்ளனர். மேலும், பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது கல்வியை பாதியில் கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஐநா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது போர் நிறுத்தம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தொடர்ந்து உக்ரைனில், ரஷ்யா போர் புரிந்து வருகிறது. அதேநேரம் உலக நாடுகளின் உதவியுடன் உக்ரைனும், ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான போர் 2 ஆண்டுகள் நிறைவை அடுத்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்து உள்ளது.
ஏற்கனவே உக்ரைன் போரால் உள்நாடு மற்றும் உலக நாடுகள் மத்தியிலும் பல்வேறு அவப்பெயர்களை சம்பாதித்து உள்ள அதிபர் புதின், தற்போது மேலும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், முக்கிய புதின் எதிர்பாளருமான அலெக்சி நவால்னி கடந்த வாரம் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பு ரஷ்ய அதிபர் புதினுக்கு மேலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. நவால்னி மரணத்தில் மர்மம் நிலவுவதாக உலக நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அலெக்சி நவால்னி மறைவு குறித்த மர்மம் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக ரஷ்யா மீது 500 புதிய தடைகளை அமெரிக்கா விதித்து உள்ளது.
அதேபோல் ரஷ்யாவின் போரை மறைமுகமாக ஆதரிக்கும் சீனா, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீன் மீதும் 100 தடைகளை அமெரிக்கா அறிவித்து உள்ளது. இந்த தடைகள் அனைத்தும் நவால்னியின் சிறைத் தண்டனை, நிதித் துறை, பாதுகாப்பு தொழில்துறை மற்றும் ரஷ்யாவின் நெட்வோர்களுடன் கொள்முதல் மேற்கொள்ளும் அனைத்து தனிப்பட்ட நபர்கள் மீது பொருந்தும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்து உள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியது முதல் ரஷ்யா மீது ஏறத்தாழ 2 ஆயிரம் தடைகளை அமெரிக்கா அமல்படுத்தி உள்ளது. இருப்பினும் கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரத்தை விட ரஷ்யாவின் பொருளாதாரம் 3 சதவீதம் அளவுக்கு வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் இரினா போரோவெட்ஸ் தெரிவித்து உள்ளார். மேலும், மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச அமைதி மாநாட்டில் இந்தியாவுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்து உள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க : "புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்" - மத்திய அரசு!