இலங்கை.யின் 16 ஆவது நாடாளுமன்றம் கடந்த மாதம் 24 ஆம் தேதி கலைக்கப்பட்டது.இதையடுத்து, இலங்கையின் 17 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ( நவம்பர் 14) நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (அக்டோபர் 11) நிறைவடைகிறது. இதையடுத்து, இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதிலும், கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக இறங்கி உள்ளன.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், பார்வையாளர்களாக பங்கேற்க எட்டு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இலங்கை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிங்க: காந்தியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலுக்கு லெபனான் தூதர் சொன்னது என்ன?
தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகளை மேற்பார்வையிட ரஷ்யா, காமென்வெல்த் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை தேர்தல் பார்வையாளர்களாக பங்கேற்ற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்,ரத்நாயக்கே கூறியுள்ளார். ஆசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பார்வையாளர்களாக பங்கேற்பார்கள் என்று NewsFirst.lk இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின்போதும், இதேபோன்று சர்வதேச பார்வையாளர்கள் குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது