பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இரண்டு வெவ்வேறு இரண்டுகளில் உள்ள ராணுவ நிலையங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம் ஹசன் கெல் பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலையத்தின் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள மற்றொரு ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பயங்கரவாதிகள் அங்கு இருந்த ராணுவ நிலைகள் மீது கண்மூடித்தன தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 7 வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பன்னு பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே 8ஆம் தேதி வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மகளிர் பள்ளி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பள்ளியின் காவலாளியை பிடித்து சித்ரவதை செய்த பயங்கரவாதிகள் மகளிர் பள்ளியின் இரண்டு கட்டடங்களை தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள்"- அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கை வெளியீடு! என்னென்ன உத்தரவாதங்கள்? - Lok Sabha Election 2024