சா பவுலா: வோபாஸ் நிறுவனத்தின் இரட்டை என்ஜின் பொருத்திய ATR 72-500 என்ற பயணிகள் விமானம் 57 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 61 பேருடன் பயணித்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில், திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், சா பவுலா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 61 பேரும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வின்ஹீடோ நகா்ப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக நகரின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா். வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.
மேலும் விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக வானில் வட்டமடித்து சுழலும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. விபத்து தொடர்பாக வோபாஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 58 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 61 பேருடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் (Guarulhos) நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தி உள்ளது.
விபத்துக்கான காரணம் என்ன என்று அறிக்கையில் கூறவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடமே மயமான பூமி போல் காட்சி அளிப்பதால் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக பிரேசில் அதிபர் தெரிவித்து உள்ளார். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், என்ஜினில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டதா அல்லது கட்டுப்பாட்டுக் கருவியில் ஏதேனும் கோளாறா என விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: "ஷேக் ஹசீனா தான் பிரதமர்; அவாமி லீக் மீண்டும் ஆட்சி அமைக்கும்" - ஷேக் ஹாசீனாவின் மகன் பிரத்யேக பேட்டி - Sheikh Hasina