தெஹ்ரான்(ஈரான்): ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று (மே 19) அஜர்பைஜான் சென்று திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அஜர்பைஜானில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஹெலிகாப்டரில் நாடு திரும்பியுள்ளார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட விபத்தில் ஈரானின் வடகிழக்கில் வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
இதனைதொடர்ந்து அடர்ந்த வனப்பகுதி மற்றும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் படையினரின் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மீட்புப் படையினரிடம் ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் இன்று காலை கிடைத்துள்ளது.
இதனையடுத்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மோடி இரங்கல்: இதனைதொடர்ந்து ஈரான் அதிபர் உயிரிழப்பிற்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “சையத் இப்ராகிம் ரைசி மறைந்த செய்தி அதிர்ச்சியும், சோகமும் அளிக்கிறது. ஈரான் நாட்டின் அதிபராக ரைசி, இந்தியா -ஈரான் இருநாட்டின் உறவை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை நினைகூர்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், ஈரான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஈரானுடன் இந்தியா துணை நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிர்கிஸ்தான் வன்முறை; பாக். மாணவர்கள் 4 பேர் கொலை.. இந்திய மாணவர்கள் வெளியே வராதீங்க - தூதரகம் அறிவிப்பு! - Indian Students In Kyrgyzstan