புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதியாக கருதப்பட்டு வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இந்தியா -கனடா இடையேயான ராஜாங்கரீதியான உறவில் விரிசலை இக்கொலை சம்பவம் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து இருநாடுகளுக்கும் இடையே அவ்வபோது கருத்து மோதல்கள் நிலவி வந்தன.
இந்த நிலையில், நிஜ்ஜார் கொலை விவகாரத்தின் தொடர்ச்சியாக தற்போது கனடாவுக்கான இந்திய தூதரையும், பிற தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரிவினைவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசின் நடவடிக்கைகள், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: "போர்களத்தில் இருந்து சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காது" - கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
தற்போதுள்ள கனேடிய அரசாங்கம், தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரை திரும்பப் பெறுவதென்ற முடிவுக்கு முன்னதாக, இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டூவர்டு வீலருக்கு, வெளியுறவு அமைச்சகம் இன்று மாலை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், "இந்திய தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் கனேடிய அரசின் செயல் கொஞ்சமும் ஏற்புடையதல்ல" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, "இந்திய தூதரக அதிகாரிகள் மீது கனேடிய அரசு வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவையே" என்று இந்தியாவுக்கான கனேடிய தூதர் ஸ்டூவர்டு வீலர் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியிருந்தார்.