இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி சூழலில் நேற்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் தேசிய சபை மற்றும் 4 மாகாணங்களுக்கானத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 12.85 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவுக்கு முந்தைய தினத்தில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இரண்டு குண்டு வெடிப்பில் சுமார் 30 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பாதுகாப்பு முன்னேற்பாடாக ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளுடனான சாலை மூடப்பட்டது. மேலும் செல்போன் தகவல் தொடர்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நேரத்தில் செல்போன் தொடர்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ஓட்டு போட சென்ற மக்கள் வாக்குச்சாவடியை கண்டறிய முடியாமல் அவதியடைந்தனர்.
மேலும், நேற்று வாக்குப்பதிவின் போது ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய கைபவர் பக்துன்கவா என்னும் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையம் முன் இருந்த போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு இடையில் மும்முனை போட்டி நிலவியது.
இம்ரான் கான் கட்சியின் பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதால் அந்த கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக களம் கண்டனர். பாகிஸ்தானில் நேற்று மாலை வாக்குபதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது. இதில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
தேர்தல் முடிவு குறித்து தேர்தல் ஆணையம் முறையாக அறிவிக்காத நிலையில், நெட்டிசன்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா 47 இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உழல் வழக்கில் கைது, கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது உள்ளிட்ட பல்வேறு இக்கட்டான சூழலிலும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 154 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். இதுகுறித்து இம்ரான் கானின் X பக்கத்தில், “மக்கள் மத்தியில் அபிமானத்தை குறைப்பதற்கான அனைத்து வழிமுறைகளை கையாண்ட போதிலும், மக்கள் தேர்தல் மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தியுள்ளனர். நமக்கான நேரம் வந்துவிட்டால் எந்த சக்தியாலும் நம்மை தோக்கடிக்க முடியாது. படிவம் 45ஐ பெறுவதன் மூலம் வாக்கை பாதுகாப்பது முக்கியமானது” என பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதரஸா கட்டடம் இடிப்பு; போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 1 பலி.. 3 பேர் கவலைக்கிடம்!