புதுடெல்லி: வங்கதேசத்தில் அண்மையில் வெடித்த மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய சூழலில், வங்கதேசத்தின் ஜகன்நாத் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) இந்தியாவை கண்டித்து பேரணி நடத்தினர். வங்கதேச அரசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே, திரிபுராவின் கம்டி நதியின் மீது கட்டப்பட்டுள்ள டம்பூர் மற்றும் காஜல்டொபா அணைகளின் மதகுகளை இந்தியா திறந்துவிட்டதன் விளைவாகவே வங்கதேசத்தின் எட்டு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
வங்கதேச மாணவர்களின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, இக்குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்துள்ளது. "இந்தியாவின்கிழக்கு எல்லையையொட்டி அமைந்துள்ள வங்கதேசத்தின் எட்டு மாவட்டங்களில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு திரிபுரா மாநிலத்தில் ஓடும் முக்கிய நதியான கம்டியின் மீது கட்டப்பட்டுள்ள டம்பூர் அணை திறக்கப்பட்டது தான் காரணம் என்று வங்கதேசம் குற்றமசாட்டி உள்ளதாக அறிகிறோம். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது" என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
"இந்தியா மற்றும் வங்கதேசம் வழியாக பாயும் கம்டி நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாக அளவுக்கு இந்த ஆண்டு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் திரிபுரா மாநிலம் முழுவதிலும், இந்திய எல்லையை ஒட்டிய வங்கதேச மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் விளைவாக, டம்பூர் அணையின் நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரிக்கவே, அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டியதானது. அணையின் நீர்திறப்பு குறித்த விவரங்கள், ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வங்கதேசத்துக்கு பகிரப்பட்டு வந்தது. அதன் பிறகு, கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட மின்தடை காரணமாக, அன்று மாலை 6 மணி முதல் அணை நீர்திறப்பு குறித்த விவரங்களை பகிர இயலவில்லை. இருப்பினும் மாற்று வழிகளில் இத்தகவல் வங்கதேசத்துக்கு பகிர முயற்சித்து வருகிறோம்" என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய எல்லையில் வங்கதேசத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டம்பூர் அணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சக்தியில் 40 மெகாவாட் மின்சாரத்தை திரிபுராவிடம் இருந்து வங்கதேசம் பெற்று வருகிறது என்பதும், நதிகளின் பாய்ச்சல் அடிப்படையில் இருநாடுகளும் 54 பொது எல்லைகளை கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரையும் வங்கதேசப் போர் கதை? இந்தியாவை கௌரவிக்கும் நினைவுச் சின்னங்கள் என்ன ஆகும்?